ஆலய நிர்மாணிப்புப் பணியை இடைவிடாது தொடர்வதற்காக, தனி நபர்களிடம் இருந்து கடன் பெறும் ஒரு கட்டமைப்பை உருவாக்கிச் செயற்படுத்துதல்

Posted in Innsamling

ஆலய கட்ட வேலைகளுக்கு அடியார்களிடம் நிதி சேகரித்தல் சோவீட் 19 காரணமால் மிகவும் தாமதமாக நடைபெறுகிறது. எமது நிதி சேகரிப்பாளர்களால் வீடு வீடாக செல்லமுடியாத நிலையிலுள்ளார்கள். எம்மால் ஆலயத்திற்கு அடிக்கடி வருகைதரும் அடியவர்களிடமும் மற்றும் விசேட தினங்களில் வருகை தரும் அடியவர்களிடமும் மட்டும் தான் எம்மால் ஆலயத்தில் சந்தித்து நிதி சேகரிக்கக்கூடியதாகவுள்ளது. அடியவர்களே ஆலயத்திற்கு அடிக்கடி வருகைதராத உங்கள் நண்பர்கள் மற்றும் உறவிணர்களிடம் ஆலய கட்டடவேலைகளை முன்னெடுக்க உதவுமாறு வேண்டுங்கள்.

தற்போதைய நிலை

ஆலயக்கட்டடத்தின் முதற்கட்ட வேலைகள், 15 மில்லியன் குறோணர்கள் செலவில் முடிவடைந்துள்ளன. இதற்காக 12 மில்லியன் செலுத்தப்பட்டு விட்டது. மீதமாயுள்ள 3 மில்லியனும், இந்து கலாச்சார மன்றம் 16, 17 ம் ஆண்டுகளில் சேமித்து வைத்திருக்கும் நிதியைப் பெற்று விரைவில் செலுத்தப்படவுள்ளது.

2 ம் கட்ட வேலைகள்

2ம் கட்ட வேலையாக ஆலய மேற்தளம் சீமெந்தினால் கட்டப்பட்டு கூரைகள் போடுவது வரை நடைபெறும், அதற்குரிய செலவினம் 12 மில்லியன் குறோணர்கள் என வரையறை செய்யப்பட்டுள்ளது. இதுவரை அடியார்களினால், கட்டிட நிதிக்கு செலுத்திய தொகையில் ஒரு பகுதிப்பணம் ஆலய ஆரம்ப திட்டமிடல் வேலைகளுக்காகப் பாவிக்கப்பட்டு, மீதியாக 3 மில்லியன் குறோணர்கள் மட்டுமே கையிருப்பில் உள்ளதால், 2 ம் கட்ட வேலையைத்தொடர, உடனடித்தேவையாக எமக்கு 9 மில்லியன் குறோணர்கள் தேவையாகவுள்ளது.

எமக்கு, நிதியைச் செலுத்துவதாக வாக்குறுதியளித்த அடியார்களிடமிருந்து இன்னும் 5 மில்லியன் குறோணர்கள் வரை வரவுள்ளது. ஆனால், இத்தொகையை அன்பர்கள் மாதாந்தம் செலுத்துவதால் குறிப்பிடப்பட்ட 5 மில்லியனும் 2௦18 ம் ஆண்டின் இறுதிக் காலப்பகுதிகளிலேயே முழுமையாக எமது கணக்கில் வந்துசேரவுள்ளது. நாம் வங்கியிடமிருந்து கடன் பெறுவதற்காகத் தொடர்புகொண்டபோது, அவர்கள் 2 ம் கட்ட வேலைக்கு கடன் தர முடியாது எனவும், 2 ம் கட்ட வேலைகளை நாம் முடித்தால் மட்டும் 3 ம் கட்ட வேலைகளுக்காக 2௦ மில்லியன் கடன் தருவதாக உறுதியளித்துள்ளார்கள். ஆகையால், 2 ம் கட்ட வேலையைத் தொடரத் தற்காலிகமாகக் கடன் பெறவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

எமது புதிய திட்டம்

நாம் பொதுமக்களிடமிருந்து தலா ஒரு இலட்சம் ( 100000) குறோணரைத் தற்காலிக கடனாகப் பெறுவதற்கான திட்டத்தை மேற்கொள்ளவுள்ளோம், இத்திட்டம் பற்றிக் கலந்தாலோசிக்கப்பட்டபோது, இத்திட்டத்துக்கு ஆதரவு தர விரும்பும் பலரும், வழங்கும் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான உத்தரவாதத்தைக் கேட்கிறார்கள். அதற்காக நாம் சட்ட வல்லுநரை அணுகியுள்ளோம். அவர்களின் வழிகாட்டலில் தனியாரிடமிருந்து கடனைப் பெற்று, 3 வருடத்துக்குள் பின் திரும்ப வழங்கும் தன்மையைக்கொண்ட ஒரு அமைப்பை உருவாக்கவுள்ளோம்.

அமைக்கப்படவிருக்கும் அமைப்புக்கு, கடன் வழங்க சம்மதிக்கும் மக்கள் ஒரு இலட்சம் (1௦௦௦௦௦) குறோணரை செலுத்துவார்கள், அதன்போது அவர்கள் அவ்வமைப்பில் தமது பங்கு வீதப்படி உரிமையார்கள் ஆவார்கள். பணத்தை வழங்கிய பங்காளிகளைக் கொண்ட அமைப்பானது, சேகரித்த பணத்தை கட்டட வேலைகளுக்காக கட்டடக்குழுவிடம், 3 ஆண்டுகால எல்லைக்குள் திரும்பச் செலுத்தவேண்டும் என்ற நிபந்தனையோடு கடனாக வழங்கும். நாம் மக்களிடம் இருந்து 9 மில்லியன் குரோணர்களை இத்திட்டத்தினுடாக கடனாக பெறுவதற்கு உத்தேசித்துள்ளோம். இந்த அமைப்பானது, இந்து கலாச்சார மன்ற செயற்பாடுகளிலோ, கோவில் நடைமுறைகளிலோ எதுவித தலையீடும் செய்வதற்கு சட்ட ரீதியான வரைவுகளில் இடம் அழிக்கப்படமாட்டாது. இருப்பினும், நடைமுறையில் இருக்கும் நிர்வாகமானது கடனை மீளச் செலுத்தும் முறையில் ஆலய பொருளாதாரத்தைச் சிறப்புற முன்னெடுத்துச் செல்லாவிடில் ஏற்கெனவே யாப்பில் குறிப்பிட்டு இருக்கும் சரத்துக்களுக்கு அமைய பொதுச்சபையைக் கூட்டி தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

மு.கு : புதிய ஆலயக்காணியையும் கட்டிடத்தையும் அடகு வைத்தே, ஆரம்பிக்கப்படவிருக்கும் அவ்வமைப்பிடமிருந்து பணம் பெறப்படும். ஆலய நிர்வாகமும், கட்டடக்குழுவும் 3 ஆண்டுகளுக்குள் பணத்தை திரும்பச் செலுத்தாத பட்சத்தில், இவ்வமைப்பானது சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். ஆனாலும் அதற்கான ஒரு சூழல் ஏற்பட வாய்ப்பேயில்லை. எவ்வாறெனில், 2௦18 ல் உறுதியளித்தோரிடமிருந்து வரவுள்ள தொகை 5 மில்லியன். 2௦18, 2௦19 ல் நடைமுறை நிர்வாகம் சேமிக்கும் தொகை 3 மில்லியன்.18,19 ம் ஆண்டுகளில் மீதியாகவுள்ள குறோணர்கள் 1 மில்லியனையும் இதுவரை பணம் செலுத்தாத அன்பர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

ஆதலால் அன்பர்களே, நோர்வே நாட்டின் தலைநகர் ஒஸ்லோவில், தமிழர்தம் கைவண்ணத்தைக் காட்சிப்படுத்தும் வகையிலமைந்த கம்பீரமானதோர் கலைப்பொக்கிஷத்தை செந்தமிழ்தந்து கொடுவினை தீர்க்கும் குமரனுக்காய் உருவாக்கிச் சாதனை படைப்போம் வாரீர்!

Innsamling bankkonto: Nordea 6060 05 76162
Facebook: @oslomurugantemple
E-post: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Tlf: 401 44 741